நாமக்கல் மாவட்டத்தின் மூலிகைச் சுற்றுலாத் தலமாக விளங்கிவரும் கொல்லிமலை கடல் மட்டத்திலிருந்து ஆயிரத்து 400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த சுற்றுலா மையம் கடந்த 15 நாள்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
இந்நிலையில் வங்கக் கடலில் உருவான நிவர் புயல் காரணமாக கொல்லிமலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி வெளியூர், வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைக்கு வருவதைத் தடைசெய்து மாவட்ட வனத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் காரவள்ளி சோதனைச் சாவடியிலேயே திருப்பி அனுப்பப்பட்டுவருகின்றனர். அதேசமயம் கொல்லிமலையில் வசிக்கும் பொதுமக்கள் கொல்லிமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்தத் தடை ஒருசில நாள்களுக்குத் தற்காலிகமானதுதான் என வனத் துறையினர் தெரிவித்தனர்.