கோவில்பட்டியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "அதிமுக, ஜெயலலிதா பற்றி பேச திருமாவளவனுக்கு தார்மீக உரிமை இல்லை. அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான். அதனால்தான் இன்றைக்கு அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்படவில்லை. ஜெயலலிதா வெற்றிடத்தினை இன்றைக்கு மட்டுமல்ல... என்றைக்கும் யாராலும் நிரப்பமுடியாது. ஜி.எஸ்.டி வரி கொண்டு வரும்போது பல்வேறு விமர்சனங்கள் வந்த போதிலும், ஒரே நாடு ஒரே வரி என்ற பெயரில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரு ரேசன் கார்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பிரச்னை எழுந்தால் அது பற்றி கருத்து தெரிவிக்கிறேன். திட்டம் நடைமுறைபடுத்துவதற்கு முன்பு கூறுவது சரியான செயலாக இருக்காது. வைகோவிற்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கியுள்ளதால், அவர்களை திருப்திபடுத்த அவர் பேசி வருகிறார்.
நீட், காவிரி ஆகிய பிரச்னைக்கு அதிமுக இறுதிவரை போராடியது. மாநில அரசுகள் அதிகாரங்கள் பறிக்கப்படும் நிலை வந்தால் அதிமுக குரல் கொடுக்கும். தங்கதமிழ்செல்வன் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு செல்லவில்லை. அமமுகவில் இருந்து சென்றுள்ளார். எனவே, அது பற்றி டி.டிவி.தினகரன் தான் கூற வேண்டும்" என்றார்.