நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மலையில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரரை திருத்தொண்டர் படையின் நிறுவனத் தலைவர் ராதாகிருஷ்ணன் இன்று தரிசனம் செய்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ' இந்தக் கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றது. ஆனால், இங்கு விண்ணை முட்டும் அளவிற்கு பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலுக்குச் சொந்தமான மரகத லிங்கம், ஈரோடு மாவட்டத்தில் தனியார் விடுதியில் சிலை தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டது.
ஆனால், அசல் மரகத லிங்கத்தை மீட்பதற்கோ? தற்போது கோயிலில் உள்ள மரகத லிங்கத்தின் உண்மைத் தன்மை என்ன என்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறையிடம் பலமுறை தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. இதன் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள், முக்கியப் பெரும்புள்ளிகள் இருக்க வாய்ப்புள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் நடந்த தங்க ரத திருப்பணிகளில் மிகப்பெரிய அளவிலான மோசடி நடந்துள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட தங்கத்தில் ஒரு விழுக்காடு கூட செலவழிக்கப்படவில்லை. இதுகுறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு 1982இல் சிலை கணக்கெடுப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து தற்போது உள்ள சிலைகளை ஒப்பிட்டு ஆய்வுகள் செய்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க: கோயில் பூட்டை உடைத்து பணம் திருட்டு-திருடர்களுக்கு வலைவீச்சு