நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில், மத்திய மாநில அரசு சார்பில் நடைபெறும் திட்டப்பணிகளை மக்களவை உறுப்பினரும், மத்திய ஊரக வளர்ச்சித்துறை நிலைக்குழு உறுப்பினருமான ஏ.கே.பி.சின்ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் மல்லசமுத்திரம் அருகே உள்ள கோட்டப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பில்லர் (தூண்) அமைக்கும் பணிகள் ரூ.27.80 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நாமக்கல் மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி சின்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பள்ளியில் சுற்றுச்சுவரின் பில்லர் தரமானதாக கட்டாமல் இருப்பதை அறிந்த சின்ராஜ், குழந்தைகள் படிக்கும் பள்ளியில் தரமற்ற பொருட்கள் கொண்டு கட்டப்படும் சுற்றுச்சுவரால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எனக் கூறி, பில்லரை தன் கையால் உடைத்து சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரிடம் தற்போது உள்ள பில்லர் அனைத்தையும் அப்புறப்படுத்தி விட்டு மீண்டும் தரமான தூண்களை கட்ட வேண்டும் இல்லையெனில் பணிக்கான நிதி ஓதுக்கீடு செய்ய முடியாது என எச்சரித்தார்.
இதேபோல் எம்.பி சின்ராஜ் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பவித்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 38 லட்சம் மதிப்பீட்டில் தரமில்லாமல் கட்டப்பட்ட பள்ளியின் சுற்றுச்சுவரின் செங்கற்களை கைகளால் பெயர்த்து எடுத்து மீண்டும் கட்டச்சொல்லியது குறிப்பிடதக்கது.