திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியதாஸ்-கலாமேரி தம்பதியின் இரண்டாவது மகன் சுஜித். கடந்த வெள்ளிக்கிழமையன்று (அக்.25) ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித் 80 மணி நேர போராட்டத்திற்கு பின்பு சடலமாக மீட்கப்பட்டு அவரது கிராமத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார். சுஜித் மரணம் இந்தியாவையே உலுக்கியுள்ள நிலையில் பலரும் ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.
சுஜித் உயிருடன் மீட்கப்படுவார் என்ற நம்பிக்கையோடு காத்திருந்த தமிழ்நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம்
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள விட்டிலாபுரம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், ஆசிரியர்கள், பொதுமக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம்
இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ, மாணவியர் சார்பில் சுஜித் உருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது, தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நிகழாமல் இருக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர்.
நாமக்கல் மாவட்டம்
சுஜித்தை தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.