தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய சுப்பிரமணியன் மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனைப்போன்று 13 ஆட்சியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வரும் நிலையில், அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்களை விநியோகித்து பெற்று வருகிறது.
அதனடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் விருப்பமனு விநியோகத்தை அதிமுக இன்று தொடங்கியுள்ளது. இன்றும் நாளையும் விருப்பமனுக்கள் விநியோகிக்கப்படவுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களுளிடம் விருப்ப மனு பெறும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கட்சி உறுப்பினர்களுக்கு விருப்ப மனுக்களை விநியோகித்தார். இதில் அமைச்சர் சரோஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர், சந்திரசேகரன் சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, "நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 100 விழுக்காடு வெற்றி பெறும். ஐஏஎஸ் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்படுவது நிர்வாக வசதிக்காகத் தான். இது குறித்து வேறு எதுவும் கூற முடியாது.
யார் வந்தாலும் அதிமுகவில் இணைத்து கொள்வது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் முடிவெடுப்பார்கள். தமிழ்நாட்டில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதுதை எதிர்த்து போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சிகள் மாநிலத்தின் வளர்ச்சியை தடுத்து வருகின்றனர்" என்று குற்றம் சாட்டினார்.