நாமக்கலில் அனைத்துத் துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜனவரி 13) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டார்.
பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “ஜெயலலிதாவின் வழியில் மக்கள் போற்றும் நல்லரசாக, இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார்.
உலகமே அச்சுறுத்தும் கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக திகழ்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடப்படும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் அறிவுரைகளின் படி தடுப்பூசி போடப்படும்.
தஞ்சாவூரில் நடைபெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அது வருந்தத்தக்க துயரமான சம்பவம். பேருந்தில் இருந்து குதித்தவர்கள் மீது தான் மின்சாரம் தாக்கியுள்ளது. பேருந்தில் இருந்தவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.
இச்சம்பவத்தில் முழு விசாரணை நடத்தி யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் ட்விட்டரில் கூட்டணி தொடர்பாக வெளிப்படையாக கூறியுள்ளார். சந்திப்பு குறித்து நான் எதையும் வெளியே சொல்ல முடியாது” என தெரிவித்தார்.
முன்னதாக, தஞ்சாவூர் மாவட்டம் வரகூர் அருகே தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் திடீரென இறங்கியதால், தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது. அந்த விபத்தில் பெண் ஒருவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் புதிதாக 673 பேருக்கு கரோனா உறுதி