நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் சரளை மேடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் ( வயது 70). இவர் தனக்குச் சொந்தமான இடத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். இதில் வடமாநிலங்களைச் சேர்ந்த சிலர் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அதே பகுதியில் குசை அமைத்துத் தங்கியுள்ளனர். இந்நிலையில், புதன்கிழமை மாலை தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதேபோல் ஜேடர்பாளையம் அருகே புதுப்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம் என்பவரும் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய ஆலை கொட்டகை மற்றும் ஆலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர். பின்னர், வேலாயுதம் பாளையம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த இரு சம்பவங்களால் ஜேடர்பாளையம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த நித்யா என்ற பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அந்த பகுதியில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலை ஒன்றில் தங்கி வேலை பார்த்த கரூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் நித்யா கொலை வழக்கில் வட மாநில இளைஞர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இந்த சூழலில் திடீரென வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளுக்கு அடுத்தடுத்து தீவைப்பு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் நாமக்கல் மாவட்ட எஸ்.பி.கலைச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும் நேரில் பார்வையிட்டார். இதனிடையே, அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாயமான சென்னை மருத்துவர்!