நாமக்கல்லில் பருவநிலை மாற்றம் மற்றும் அதற்கேற்ப விவசாய தொழிற்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்த கருத்தரங்கம் நபார்டு வங்கியின் சார்பில் நடைப்பெற்றது. இதில் பேசிய முனைவர் சதீஸ்பாபு, பருவநிலையால் ஏற்பட்டு வரும் கால மாற்றங்களில் மிகுதியாக நிலமும், விவசாயமும் பாதிக்கப்படுகின்றன. பருவநிலை மாற்றத்திற்கேற்ப விவசாயிகள் தங்களது நிலங்களில் உரிய பயிர்களை விதைத்தால் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ளமுடியும் என்று தெரிவித்தார்.
மேலும், இத்தகைய பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள கால்நடை வளர்ப்பும், பயிரிடுதலும் இணைந்து செயல்படும் போது, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு உகந்ததாக இருக்கும். பெரும்பாலும் விவசாய நிலங்களுக்கு இயற்கை உரம், பூச்சிக்கொல்லி போன்றவற்றை பயன்படுத்தினால் பாதிப்புகள் குறையும். எனவே விவசாயத்தில் ஈடுபடும் ஒவ்வொரு ஆண்களும், பெண்களும் பருவநிலை மாற்றத்தினை மனதில் கொண்டு புதிய தொழிற்நுட்பங்களை விவசாயத்தில் புகுத்தினால் பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்ள முடியும் என்றார்.
இந்தக் கருத்தரங்கில் விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள், இயற்கை உரம், இயற்கை பூச்சிவிரட்டி, பால்கறக்கும் இயந்திரம், இயற்கை உணவு வகைகள் மற்றும் தேன் எடுக்க பயன்படும் மரப்பெட்டி ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. இந்த கருத்தரங்கில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.