நாமக்கல்: வரவிருக்கின்ற 2024 நாடாளுமன்ற தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பயணம் மேற்கொண்டு வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களை9 சந்தித்தார்.
அப்போது அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் செப்-15ஆம் தேதி தேர்தல் வாக்குறுதிகள், 100 சதவீதம் நிறைவேற்றி விட்டேன் என கூறி வருகிறார். ஆனால் ஆசிரியர்கள், செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சொத்து வரி, மின் கட்டணம் உயர்த்தி உள்ளனர். இதன்மூலம் வாக்குறுதிகளை 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை என தெரிகிறது. மகளிர் உரிமை தொகைக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசு செலவு செய்கிறது. யாருடைய பணத்தை செலவு செய்கிறார்கள். 60 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
ஜெயிலர் திரைப்படத்திற்கு எவ்வித இடையூறும் வரவில்லை. நடிகர் விஜய் நடித்த லியோ படத்திற்கு இசை வெளியீட்டு விழாவில் இருந்தே பிரச்சினை தான், திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படும் வரை பிரச்சினை ஏற்படுத்தி வருகின்றனர். நடிகர் விஜய் கட்சி துவங்கி அரசியலில் வருவதாக தெரிந்ததால் தான் கடும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பாளராக இருந்தால் நீதிமன்றம் இவ்வாறாக தீர்ப்பு வழங்கி இருக்குமா..?
நடிகர் விஜய் நடிப்பதை நிறுத்தி விட்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்து விட்டார். திரையரங்குகள் உங்களிடம் இருப்பதால் தான் மிரட்டி வருகின்றனர். அவர் நடிப்பதை நிறுத்தி விட்டால் என்ன செய்யமுடியும். தேவை இல்லாமல் நடிகர் விஜயை சீண்டி விட்டீர்கள். தமிழகத்தை 60 ஆண்டுகாலமாக திராவிட கட்சிகள் ஆண்டு விட்டனர். வரலாற்றை திரும்பி பார்த்தால் பல அரச சாம்ராஜ்யங்கள் வீழ்ந்துள்ளன. அதேபோல் ஒருநாள் திராவிட கட்சிகள் அழியும்.
தேர்தலுக்கு தன்னிச்சையாக தான் சந்திப்பதாகவும், கருணாநிதியோ, எம்ஜிஆரையோ, ஜெயலலிதாவையோ பார்த்து அரசியல் செய்ய வரவில்லை எனவும், பிரபாகரன் வழியில் வந்ததாகவும், 8 கோடி மக்களை நம்புவதாகவும் தெரிவித்தார். இன்று தோல்வியடையலாம் ஆனால் ஒருநாள் சீமானை கொண்டாடலாம், அந்த காலம் வரும் எனவும் தெரிவித்தார். மேலும், தான் தினசரி செய்தியாளர்களை சந்தித்து வருவதாகவும் அதேபோல் அண்ணாமலையும் தினசரி செய்தியாளர்களை சந்தித்து வருவதாகவும் ஆனால் முதலமைச்சர், பிரதமர் ஆகியோர் செய்தியாளர்களை சந்திப்பதில்லை” எனத் தெரிவித்தார்.