கரடுமுரடான கல்லையும் கடவுளாக்கும் வித்தை தெரிந்தவர்கள் சிற்பக் கலைஞர்கள். உளியோசை கேட்கும் சிற்பக் கலைக்கூடத்தில் கழியும் நாள்களில்தான் இவர்களின் நிம்மதியே இருந்தது. குறைந்தது இரண்டு நாள்களில் ஒரு கல்லை, கண்ணைக் கவரும் சிலையாக வடிவமைத்து விற்பனைக்கு வைத்துவிடுவார்கள்.
நாமக்கல் மாவட்டம் கூலிப்பட்டி அடுத்துள்ள கந்தபுரி பகுதியில் வடிவமைக்கப்படும் கற்சிற்பங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த பகுதியில் 100 -க்கும் மேற்பட்ட சிற்ப கலைஞர்கள் புத்தர், விநாயகர் உள்ளிட்ட சுவாமி சிலைகளை கருங்கல்லிருந்து உயிர்ப்புடன் செதுக்கிவருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை இவர்களின் கலைவன்மைக்கு ஒரு எடுத்துகாட்டு.
கந்தபுரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாராக 150-க்கும் மேற்பட்ட சிற்பக் கலைக்கூடங்கள் உள்ளன. இந்த கலைக்கூடங்களிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் சிற்பங்கள் செதுக்கப்பட்டு அமெரிக்கா, ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கும், தெலங்கானா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் நேரடியாகவே அனுப்பிவைக்கப்படுகின்றன.
இப்படி உள்நாட்டில், வெளிநாட்டில் என இவர்களின் வர்த்தகத் தொடர்பு ஒரு வருடத்திற்கு ரூ. 100 கோடி வருமானத்தை ஈட்டித்தரும். ஆனால் இந்த வருடமோ சொற்ப வருமானத்திற்கே திண்டாகும் நிலை உருவாகியுள்ளது. ஊரடங்கால் ரூ. 3 கோடி வரை சிலைகள் தேக்கமடைந்துள்ளதால், ’புதியதாக சிற்பங்களைச் செதுக்க ஏற்ற சூழல் இல்லை’ என தெரிவிக்கிறார்கள் கந்தபுரி சிற்ப கலைஞர்கள்.
இது குறித்து சிற்ப கலைஞர் குமரேசன், “கடந்த ஜனவரி மாதம் முதல் எங்களிடம் முன்பணம் செலுத்தி சிற்பங்கள் தயார் செய்யும்படி கோவில் நிர்வாகிகள் அணுகினர். இதனால் மிக நுட்பமான வேலைபாடுகளுடன்கூடிய சுவாமி சிலைகளை செதுக்கினோம்.
ஆனால் ஊரடங்கால் லட்சக்கணக்கில் மதிப்புள்ள சிற்பங்கள் தேக்கமடைந்துவிட்டன. கோவில்களை அரசு திறக்க அனுமதித்தால்தான் நாங்கள் சிலைகளை டெலிவெரி செய்யமுடியும். மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் இதைக் கருத்தில்கொள்ளவேண்டும். கற்சிற்ப தொழிலாளர்கள் பலர் வேலையின்றி தவிக்கிறோம். எங்களைப் போன்ற சிற்ப கலைஞர்களுக்கு அரசு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.
ஒவ்வொரு சிலைக்கும் அதன் வடிவமைப்பு, அளவு பொறுத்துதான் விலை நிர்ணயம் செய்யப்படும். சிறிய சிலைகளுக்கு ரூ.500 என தொடங்கி லட்சக்கணக்கில் சிலைகள் செய்துகொடுக்கப்படுகின்றன. உளியின் அபிநயத்தையும், கல்லில் கலைநயத்தையும் இணைத்து பழகிய சிற்ப கலைஞர்கள் மாற்று வேலையை நாடாமல் ஊரடங்கு முடிவை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.
இது குறித்து சிற்ப கலைஞர் ஜெகதீசன், “கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் சிற்ப பணிகளை மேற்கொள்ள தொழிலாளர்கள் சிற்ப கலைக்கூடங்களுக்கு வரமுடிவதில்லை. இந்த நெருக்கடியான காலத்தில் சிற்ப கலைஞர்கள் தங்களுடன் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்துகொண்டோம். இனியும் அதைப் போல தொடர்வது கடினம் என தோன்றுகிறது. அரசு நிவாரணத்தை உயர்த்தி கொடுத்தால் உதவியாக இருக்கும்” என்றார்.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி விழா நடக்குமா? அரசின் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் சிலை செய்யும் தொழிலாளர்கள்!