நாமக்கல் மாவட்டம் பெட்டிரெட்டிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 231 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை அப்பள்ளியில் உள்ள கழிவறையில் 5ம் வகுப்பு மாணவிகள் கனிஷ்கா, காயத்ரி ஆகிய சிறுமிகள் சிறுநீர் கழிக்க சென்றனர். அப்போது, கழிவறை கதவை திறக்கும்போது எதிர்பாராத விதமாக கழிவறையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இரு மாணவிகளும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இதில் காயத்ரி என்ற மாணவிக்கு கால்பகுதியிலும் கனிஷ்கா என்ற மாணவிக்கு தலையிலும் படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்கள் இரு மாணவிகளையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் துறையினர், எருமப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவிகள் பலத்த காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.