நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சாலை சாமிகவுண்டர் காலனியைச் சேர்ந்தவர் காவியா (17). இவர் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். கரோனா பொது முடக்கத்தால் பத்து மாதங்களாக வீட்டில் இருந்த அவர், திங்கள் கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றார்.
ஆனால், படிப்பில் அவருக்கு ஆர்வம் இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் மாணவி தன்னை வேறு பள்ளியில் சேர்க்குமாறு கூறியதோடு 2 நாள்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை வீட்டை விட்டு வெளியே சென்ற காவியா வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர்.
இந்நிலையில், நாமக்கல் ரயில் நிலையம் அருகிலுள்ள கிணற்றில் சிறுமி ஒருவரின் உடல் கிடப்பதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இதையடுத்து, பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது அது காவியாவின் உடல் என்பது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மாணவியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோரிடம் காவல் துறையினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'மாணவர்கள் தற்கொலை முடிவு எடுக்க வேண்டாம்' அமைச்சர் காமராஜ் வேண்டுகோள்!