"Say no to single use plastics" என்ற தலைப்பில் ஈடிவி பாரத் ஊடகம் தேசிய அளவிலான பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நாமக்கல் அடுத்துள்ள செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் ஈடிவி பாரத்தும் இணைந்து நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மேற்கொண்டது.
மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளி, மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இதில், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழி (பிளாஸ்டிக்)-யை இனிவரும் காலங்களில் பயன்படுத்தமாட்டோம். அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான நெகிழிப் பொருட்களை முற்றிலும் பயன்படுத்தமாட்டோம்.
கடைகளில் பொருட்கள் வாங்கும்போதும் உணவு பொருட்கள் மற்றும் தண்ணீர் வாங்க ஒருபோதும் நெகிழி பொருட்களை பயன்படுத்த மாட்டோம். தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்க பாடுபடுவோம் என பள்ளி மாணவ, மாணவிகள் உறுதிமொழி மேற்கொண்டனர்.
அதன்பின்னர் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், பள்ளியின் தலைமையாசிரியர் ராஜன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் துணை தலைவர் முத்துராஜா ஆகியோர் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.
அப்போது, ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திடம் பேசிய மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், ‘நாமக்கல் மாவட்டத்தில் 700 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் நெகிழி இல்லாத வளாகத்தை அமைக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறேன்.
நெகிழியை வீட்டிலும் உபயோகப்படுத்தக்கூடாது என ஆசியர்கள் மூலம் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. ஈடிவி பாரத் சார்பில் இந்த நிகழ்ச்சி மூலம் நெகிழி பயன்பாட்டை குறைப்பது குறித்து மாணவர்களிடையே பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும்.
நெகிழி இல்லாத இந்தியாவை உருவாக்க இளைய சமூகத்தினரால் மட்டுமே முடியும். ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு நன்றி’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.