தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு பேருந்தில் சென்று படிக்கும் மாணவ மாணவிகள் பாதுகாப்புடன் சென்று வர பள்ளி பேருந்துகளுக்கு பல்வேறு பாதுகாப்பு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், கொண்டிசெட்டிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் பல்வேறு தனியார் பள்ளி வாகனங்களை, துணை ஆட்சியர் சு.கிரந்தி குமார் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இளமுருகன், வெங்கடேசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
அப்போது, தனியார் பள்ளி பேருந்துகளில் பிரேக், அவசரகால வழி பிளாட்பாரம், புட்போர்டு, டயர்கள், சீட்டுகள் ஆகியவை தரமாக உள்ளனவா?, ஓட்டுநர் உரிமம், வாகன சான்று, வாகன காப்பீடு ஆகியவை உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 142 பள்ளி வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. இதில், 8 வாகனங்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டன. மேலும், தகுதியிழப்பு செய்யப்பட்ட வாகனங்கள் இம்மாத இறுதிக்குள் ஆய்வுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என துணை ஆட்சியர் சு.கிரந்தி குமார் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வாகன சோதனையின்போது நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கலைச்செல்வி, சரவணன், ராஜ்குமார் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.