நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவர், தனியார் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் சங்கீதா வழக்கம் போல் வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் சங்கீதாவின் கழுத்தில் இருந்த ஏழரை பவுன் தாலிக்கொடியை பறித்துள்ளனர்.
இதனையடுத்து சங்கீதா கூச்சலிடவே, மர்ம நபர்கள் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து மற்றும் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் வீட்டின் முன்பே ஒரு பெண்ணின் கழுத்தில் செயினை பறித்துச் செல்லும் அளவிற்கு திருடர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பது அப்பகுதி மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.