நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பொம்மு நாயக்கர் (55). இவர் தனது விவசாய நிலத்தில் 13 ஆடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல தோட்டத்தில் உள்ள ஆட்டு பட்டிக்கு சென்று பார்த்த போது, அங்கே நான்கு வெறிநாய்கள் ஆடுகளை கடித்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
வெறி நாய்கள் கடித்ததில், 13 ஆடுகளும் உயிழந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இறந்த ஆடுகளை, பொம்மு நாயக்கர் தனது விவசாய நிலத்தில் புதைத்தார். இறந்த ஆடுகளின் மொத்த மதிப்பு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது.
இது குறித்து விவசாயி பொம்மு நாயக்கர் கூறுகையில், "கடந்த மூன்று ஆண்டுகளாக 13 ஆடுகளை வளர்த்து வந்தேன். வெறிநாய்கள் கடித்ததில் அனைத்து ஆடுகளும் உயிரிழந்துவிட்டன. தற்போது என் வாழ்வாதாரமே போய்விட்டது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு வெறி நாய்களை பிடிக்க வேண்டும். அரசு உரிய நிவாரணம் வழங்கி உதவி செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.