நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்த கண்ணூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கணவனை இழந்த நிலையில், தனது மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். தையல் தொழில் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்துதான் தனது குடும்பத்தை இவர் காப்பாற்றி வருகிறார்.
இவரின் மூத்த மகள் செளந்தர்யா அரசு கல்லூரியில் 3ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயின்று வருகிறார். இரண்டாவது மகள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 467 மதிப்பெண்கள் பெற்று, புதுசத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். தற்போது அதே பள்ளியில் 11ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளார். மகன் மணி காந்த் அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தமிழரசியின் வீட்டிலோ, ஒரு செல்போன் மட்டுமே உள்ளதால், அவரின் மூன்று பிள்ளைகளும் பாடங்களை முறையாக கற்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து பிள்ளைகளின் தாய் தமிழரசி கூறுகையில், ” கணவனை இழந்து தவிக்கும் தன்னால், நன்றாக படிக்கும் என் பிள்ளைகளின் படிப்பிற்காக அவர்களுக்கு தனித்தனியாக மூன்று செல்போன் வாங்கிக் கொடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எங்களைப் போன்ற கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களுக்கு அரசு இலவசமாக செல்போன் கொடுத்தால் உதவியாக இருக்கும்” என்றார்.
கிராமப்புறங்களில் அடிக்கடி ஏற்படும் சிக்னல் கோளாறு பிரச்னைகளுக்கு மத்தியில், ஒரு செல்போனை வைத்துக்கொண்டு, கடும் சிரமங்களுக்கு இடையே இரண்டு சகோதரிகளும் பாடம் படித்து வருகின்றனர்.
இதுகுறித்து மூத்த சகோதரி சௌந்தர்யா கூறுகையில், “ படிக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தாலும், அதற்கான வசதி எங்களிடம் இல்லை. எனக்கும் கல்லூரி படிக்கும் போது இலவசமாக மடிக்கணினி வழங்கப்படவில்லை. எங்களைப் போன்ற ஏழைக் குடும்பங்களுக்கு அரசு உதவி புரிந்தால் நன்றாக இருக்கும்” என கோரிக்கை வைக்கிறார்.
இளைய சகோதரி சுபசெளமியா கூறுகையில், ” 10ஆம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் இடம் பிடித்துள்ளேன். வீட்டில் உள்ள ஒரு செல்போனை பாடம் படிக்க என் அக்கா பயன்படுத்துவதால், என்னாலும் என் தம்பியாலும் முழுமையாக பாடம் படிக்க முடியவில்லை. அரசு தரக்கூடிய மடிக்கணினியை விரைவாக வழங்கினால் நன்றாக இருக்கும்” என்கிறார்.
தமிழ்நாட்டில் அண்மையில் ஆன்லைன் கல்விக்கு செல்போன் வாங்க முடியாததால் ஏழை மாணவர்கள் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுக்கும் சூழ்நிலையில், கல்வி கற்க ஆர்வமுள்ள ஏழை மாணவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க:அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி கிடைக்கிறதா, கல்வி கற்கும் உரிமை பாதுகாக்கப்படுகிறதா?