நாமக்கல் அருகிலுள்ள வேட்டாம்பாடியில் பிஜிபி வேளாண் கல்லூரியில் இன்று முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் பழனி ஜி. பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார் கலந்துகொண்டார். 71 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய அவர், "வேளாண்மை கல்வி சார்ந்த வேலை வாய்ப்புகள்தான் இனிவரும் காலங்களில் அதிகமாக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது", என்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்தாண்டு வேளாண்மை படிப்பிற்கு ஆன்லைன் மூலமாக 60 ஆயிரம் விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு 12 ஆம் வகுப்பில் கணினி அறிவியல் படித்தவர்களும் வேளாண் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு முதல் வேளாண்மை படிப்பில் பி.டெக் பாடப்பிரிவு ஏற்படுத்தப்படும். புதிதாக ஊட்டியில் விவசாய ஆராய்ச்சி மையம் ஆரம்பிக்க இருக்கிறோம். கோவையில் புதிதாக பொறியியல் வேளாண்மை பட்டப்படிப்பு பாடம் மூலமாக தனிப்பிரிவு தொடங்கப்படும்" என்று தெரிவித்தார்.