நாளை நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ஒரு வாக்குச்சாவடி மையம் முழுக்க முழுக்கப் பெண் அலுவலர்கள் மட்டுமே பணிபுரியும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் தலைமை வாக்குப்பதிவு அலுவலர், உதவி வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பிற்கு காவலர் என அனைவருமே மகளிர் மட்டுமே பணிபுரிய உள்ளனர்.
இவ்வாறு பெண்கள் மட்டுமே பணிபுரியும் வாக்குச்சாவடி மையத்திற்கு ‘பிங்க் வாக்குச்சாவடி மையம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இங்கு பெண்கள் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கும் வாசகங்கள் சுவற்றில் இடம்பெற்றுள்ளன.
மேலும், பிங்க் வாக்குச்சாவடி மையத்தில் பெண்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பிரத்யேகமாக இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.