நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களை மாவட்ட ஆட்சியர் கா. மெகராஜ், சட்டப்பேரவை உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மாவட்டம் முழுவதும் 860 வாகனங்கள் மூலம் விவசாயிகள், பெரிய வணிகர்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட இந்த பொருள்கள் நகராட்சி, பேரூராட்சி, கிராம பகுதிகளில் சென்று விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிகழ்வின் போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் கா. மெகராஜ், "வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையிலான 36 குழுவினர் ஊரடங்கினை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க, ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுவருகின்றன. சிகிச்சை மையங்களில் ஆக்ஸிஜன் படுக்கைகள் 10 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளன.
திருச்செங்கோட்டில் தொடங்கப்பட்ட கரோனா சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில், அனுமதிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கும் 47 ஆக்ஸிஜன் படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளன" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை கருப்பு பூஞ்சை தாக்குதல் எதுவும் இல்லை. தொற்றுப் பரவலை மிக விரைவாக கண்டறிய வீடுகள் தோறும் சென்று பொதுமக்களின் உடல்நிலை, காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகள் குறித்து விவரங்கள் சேகரிக்க 4 ஆயிரத்து 800 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை 4 ஆயிரத்து 500 வீடுகளுக்கு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக கண்டறியப்பட்டு அவர்களுக்குப் பரிசோதனை செய்துகொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
இதனால் மருத்துவமனைகளில் நெருக்கடி குறையும். இறப்புகளையும் தடுக்க முடியும். எனவே நகராட்சி, பேரூராட்சி, கிராமப்புற பகுதிகளில் இதுபோன்று விவரங்கள் சேகரிக்க வரும் பணியாளர்களுக்குப் பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு தரவேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.