நாமக்கலில் இந்த ஆண்டு மழையின் அளவு சராசரியைவிட குறைந்த அளவே பெய்துள்ளது. இதனால் பல இடங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சேந்தமங்கலம் கொல்லிமலை பகுதியில் போதிய மழை இல்லாமல் பல இடங்களில் விவசாய பயிர்கள் கருகி சேதமடைந்துள்ளன. பல ஆண்டுகளாக பராமரித்து வரும் பாக்கு மரங்கள், தென்னை மரங்கள், மாமரங்கள், வாழை மரங்கள் உள்ளிட்ட பணப்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன.
இதேபோல் கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி, பள்ளம்பாரை, கருவாட்டாறு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன. இதனால் இப்பகுதியில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக நிலவி வருவதால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். மேலும், இதே போன்று மழை இல்லாத சூழ்நிலை தொடர்ந்து நிலவி வந்தால் விவசாயம் செய்ய முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், பல இடங்களில் விவசாயம் செய்ய முடியாமல் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வெவ்வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்வதாகவும் வருத்தம் தெரிவித்தனர். சொட்டு நீர் பாசன வசதிகள் இருந்தும் குறைந்த அளவுக்கூட தண்ணீர் இல்லாததால் பாக்குமரங்கள் காய்ந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்தனர்.