நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் அரசு திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமை வகித்தார். இதில் மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கரோனா இல்லாத மாவட்டமாக தற்போது நாமக்கல் உள்ளதால், அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். மேலும் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, "நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதையடுத்து, விசைத்தறிகள், கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசின் விதிமுறைகளை மீறிவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல்லில் கடந்த 4 நாள்களாக எந்தவித கரோனா தொற்று இல்லாததால் கரோனா இல்லாத மாவட்டமாக தற்போது உள்ளது. கோடை காலம் காரணமாக நாமக்கல்லில் குடிநீர் பிரச்னை உள்ளது. அப்பகுதிகளை உடனடியாக கண்டறிந்து மாவட்ட நிர்வாகம் தண்ணீர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாமக்கல்லில் 13 குடிமராமத்துப் பணிகள் ரூ. 8.44 கோடி மதிப்பீட்டில் நாளை முதல் தொடங்க உள்ளன. ஊரடங்கு நேரத்தில் எந்தத் தொழிற்சாலையும் செயல்படாத காரணத்தினால் மின் தேவை குறைந்துள்ளது. மின் கட்டணத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே மார்ச் மாதத்திற்கு உண்டான கட்டணத்தை, மின் நுகர்வோர் செலுத்தி வருகின்றனர். ஏப்ரல் கட்டணம் செலுத்த, அபராத தொகை இல்லாமல் கட்டுவதற்கு, அடுத்த மாதம் 22ஆம் தேதி வரை காலக்கெடு அளித்துள்ளோம். மேலும் இம்மாதம் 17 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு குறித்த அறிவிப்பையொட்டி, அதற்கு தகுந்தார்போல் மின் கட்டணங்கள் வசூல் செய்யப்படும்" எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா விலகும் வரை கல்லூரிகள் திறப்பு இல்லை - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்