நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தை சேர்ந்த சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வரும் சரண்(24), புதுச்சத்திரம் ஊராட்சிமன்ற கவுன்சிலர் குமார்(39) உட்பட 15 நபர்கள் பரமத்திவேலூர் அடுத்துள்ள ஜேடர்பாளையம் தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் சரண் மற்றும் குமார் ஆகியோர் ஆழம் அதிகமுள்ள பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மென்பொறியாளர் சரண் மற்றும் புதுச்சத்திரம் ஊராட்சிமன்ற கவுன்சிலரான குமார் ஆகியோர் நீரில் மூழ்கினர். இதனைக் கண்ட அவர்களது சக நண்பர்கள் இருவரையும் மீட்டனர். இதில் சரண் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் குமார் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஜேடர்பாளையம் போலீசார், உயிரிழந்த சரணின் உடலை உடற்கூறாய்வுக்காக பரமத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பொங்கல் பண்டிகையை கொண்டாட நண்பர்களுடன் புதுச்சத்திரத்தில் இருந்து 15 பேரும் ஜேடர்பாளையம் தடுப்பணையில் குளித்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.