நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த கொல்லிமலை அடிவாரப் பகுதியான காரவள்ளி, வெண்டாங்கி, நடுக்கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் 2,500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பாக்குமரங்கள் பயிரிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், இப்பகுதியில் நேற்றிரவு பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதில், அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த 3,000 பாக்குமரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். சூறைக்காற்றினால் நாசமடைந்த மரங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பலத்த சூறைக்காற்றினால் இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதம் அடைந்த நிலையில் கொல்லிமலைக்கு மின்சாரம் செல்லும் வழித்தடங்களும் பாதிக்கப்பட்டு கொல்லிமலையில் மின் தடை ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த மின் கம்பங்களை மின் ஊழியர்கள் விரைவாக சீரமைத்துவருகின்றனர்.