நாமக்கல் மாவட்டம் கடந்தப்பட்டி பகுதியில் தங்கவேல் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த புதிய வீட்டின் பணிகளை ஒப்பந்ததாரர் சிவகுமார் செய்து வருகிறார். இவரிடம் நவனி பகுதியைச் சேர்ந்த மேஸ்திரி பிரபு பணிபுரிந்து வந்தார். இன்று வழக்கம்போல், பணிக்கு வந்த மேஸ்திரி பிரபு, மோட்டார் ஆன் செய்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், அவரது உறவினர்கள், பிரபுவின் உயிரிழப்புக் காரணமான நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, 200க்கும் மேற்பட்டோர் புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பேத்தியிடம் அத்துமீறிய தாத்தா: அடித்துக் கொலை செய்த மருமகன்!