நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை எடுத்துரைக்கவும் சொந்தப் பிரச்னை காரணமாகவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவந்தனர்.
அப்போது அங்கு வந்த திருச்செங்கோடு அருகேயுள்ள எஸ். காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சித்தேஸ்வரன் (72) என்ற முதியவர் "லஞ்ச ஊழலுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்ற வாசகம் கொண்ட நோட்டீஸை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது பசுமை வீடு திட்டத்தில் தான் கட்டிய வீட்டிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒரு சில முறை பட்டா வழங்க ஆணை பிறப்பித்தாலும் கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் ஆகியோர் பட்டா வழங்குவதற்கு லஞ்சம் கேட்டனர்.
ஆனால் லஞ்சம் தர மறுத்துவிட்டதால் தன்னுடைய இலவச வீட்டுமனை பட்டா குறித்த ஆணையை ரத்து செய்துவிட்டனர். இதன் காரணமாக மீண்டும் தற்போது பட்டாவிற்காக ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக "லஞ்ச ஊழலுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்ற வாசகம் கொண்ட நோட்டீஸை மாவட்ட ஆட்சியரிடம் அளித்து, அதை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து துறைகளின் சுவரிலும் ஒட்டி வைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் நோட்டீஸை அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். இதன்காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.