நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கபட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டுநர் குணசேகரன். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும் ஆனந்தி என்ற மகளும் உள்ளனர்.
பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத குணசேகரன், பரமேஸ்வரி தம்பதி அவர்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தங்களின் மகளை படிக்கவைத்தனர். குடும்ப வறுமையை மனதில் கொண்டு நன்றாகப் படித்த மாணவி ஆனந்தி 2012ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1158 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.
அதைத் தொடர்ந்து அவருக்கு திடீரென திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு எங்கு தனது மேற்படிப்பை தொடர முடியாதோ என்று நினைத்த ஆனந்தி, தனது கணவர் ரமேஷின் உதவியோடு 2014ஆம் ஆண்டு கால்நடை மருத்துவப் படிப்பில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசினர் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பில் சேர்ந்தார்.
இதற்கிடையில் குழந்தை பிறந்ததால் நான்கு மாத கைக்குழந்தையுடன் இருந்த ஆனந்தி தொடர்ந்து படிக்க அவரின் பெற்றோரும் கணவர் ரமேஷும் உறுதுணையாக இருந்துள்ளனர்.
திருமணமான பெண், கைக்குழந்தையுடன் உள்ள பெண் எவ்வாறு கால்நடை மருத்துவம் படிக்கப் போகிறார் என்ற உறவினர்களின் கடுஞ்சொல்லை கண்டு அஞ்சாமல் ஆனந்தி தனது படிப்பில் முழு கவனம் செலுத்தினார்.
கடுமையான உழைப்பினால் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மாணவியாக விளங்கிய ஆனந்தி பல்வேறு ஆய்வுகளிலும் சிறந்தவராக விளங்கினார். இந்நிலையில் 2018ஆம் ஆண்டு கால்நடை மருத்துவப் படிப்பை முடிக்கும்போது 18 தங்கப் பதக்கங்களுடன் சாதனைப்படைத்த பெண் மருத்துவராக வெளியேவந்தார்.
நேற்று முன்தினம் சென்னை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆனந்திக்கு பட்டத்தோடு 18 தங்கப் பதக்கங்களையும் நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதுபற்றி ஆனந்தி பேசும்போது, "எனது குடும்ப சூழ்நிலையை கருதி பள்ளிப் படிப்பை சிறப்பாக முடித்தேன். திடீரென திருமண நடைபெற்றது. எனக்கு குழந்தை பிறந்த நிலையில் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது எனது கணவரும் இரு குடும்பத்தாரும் எனது படிப்பைத் தொடர உறுதுணையாக இருந்தனர்.
மேலும் கல்லூரிக்கு ஒரத்தநாடு சென்றது முதல் அங்கேயே எனது பெற்றோர் வேலைபார்த்துக் கொண்டு என்னுடன் தங்கி எனக்குப் பேருதவி செய்ததன் வாயிலாக என்னால் சாதிக்க முடிந்தது. பெண்கள் சாதிக்க திருமணமும் குழந்தையும் ஒரு தடையாக இருக்காது" எனக் கூறினார்.
லாரி ஓட்டுநரான கணவரின் சொற்ப வருமானத்தில் தங்களது ஒரே மகளை படிக்கவைத்ததாகவும் சூழ்நிலை கருதி அவரும் நன்றாகப் படித்ததாகவும் குறிப்பிட்ட ஆனந்தியின் தாயார் பரமேஸ்வரி, சிறு வயதில் தாங்கள் வளர்த்த கால்நடைகள் மீது ஆர்வம் கொண்ட ஆனந்தி இன்று கால்நடை மருத்துவராகத் தேர்ச்சிப் பெற்றுள்ளது தங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக அவர் பூரிப்புடன் தெரிவித்தார்.
'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு' என்ற காலம் மாறி இன்று ஆண்களுக்கு நிகராக சாதனைப் படைக்கும் பெண்களுக்கு கால்நடை மருத்துவர் ஆனந்தி சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
இதையும் பாருங்கள்: சாதனைக்கு வயது தடையல்ல - தன்னம்பிக்கை பாட்டி