கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் திருப்பூரில் தங்கியிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் விருப்பத்தின் பேரில் பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 808 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பிகார், உத்திரப் பிரதேச மாநிலங்களுக்கு இரண்டு சிறப்பு ரயில்கள் மூலம் 3,064 வடமாநிலத்தவர்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கான உணவு, தண்ணீர் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
மேலும், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் செயல்பட்டு வரும் தனியார் சிமெண்ட் குழாய் தயாரிக்கும் ஆலையில் பணியாற்றி வந்த 24 உத்தரப் பிரதேச தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல இணையதளம் வாயிலாக விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும் சரிவர முடிவுகள் தெரியாததால் வெள்ளக்கோவிலில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு நடந்தே செல்ல முடிவு செய்தனர்.
அப்போது, நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே வரும்போது பரமத்திவேலூர் காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கி வேன் மூலம் வெள்ளக்கோவிலுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: வடமாநிலத்தவர்களை செந்த மாநிலத்திற்கு வழியனுப்பி வைத்த அமைச்சர்