நாமக்கல் அருகே உள்ள மோகனூரில் நூற்பாலையில் பணிபுரிய விருப்பமில்லாததால் வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கே திருப்பி அனுப்ப சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் அருகே மோகனூரில் உள்ள நூற்பாலையில் வேலை வேண்டுமென சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் பிரகாஷ் என்னும் முகவரை அணுகியுள்ளனர்.
அவரின் அறிவுறுத்தலின் பெயரில் மோகனூருக்கு பணிபுரிய அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர் என்ன வேலை என்று கூறாமல் அழைத்துவந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இங்கு வந்துதான் நூற்பாலையில் வேலை என்பது தெரியவந்தது.
இருப்பினும், 15 நாட்கள் வேலை செய்து வந்தனர். தற்போது நூற்பாலையில் வேலை கடினமாக உள்ளது என சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறையிடம் புகார் தெரிவித்தனர்.
மேலும், தொழிலாளர் நலத்துறையினர் தமிழக அரசுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர். அதன் முடிவில் வடமாநில தொழிலாளர்களை மீண்டும் சொந்த மாநிலமான சட்டீஸ்கருக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.