முட்டை விலை நிர்ணயத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தன்னிச்சையாக செயல்படுவதாகக் கூறி, கடந்த 6ஆம் தேதி கோழி பண்ணையாளர்கள், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டினர். இதனைத் தொடர்ந்து அலுவலக மேலாளர் பாலசுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில், கோழிப்பண்ணையாளர்கள் நாகராஜ், கோவிந்தராஜ் உள்ளிட்ட 11 பேரின் மீது நாமக்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் இப்பிரச்னை குறித்தும், முட்டை விலை நிர்ணயம் குறித்தும் கோழிப் பண்ணையாளர்கள், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவினர், அரசு அலுவலர்கள் என முத்தரப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் கோழிப் பண்ணையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பால் பிரின்ஸ் ராஜ்குமார் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, 'விலை நிர்ணயத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும். சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பண்ணையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். விலை நிர்ணயத்திற்குச் செயலி உருவாக்கி புதிய தொழில்நுட்ப முறைகளை பின்பற்றுதல் வேண்டும். இந்தத் தொழில் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருப்பது தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்று, பண்ணையாளர்களின் நலனுக்காக அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். 5 பைசாவுக்கு மேல் விலையை உயர்த்தவோ, இறக்கவோ கூடாது எனவும் உறுதியாக முடிவு எடுங்கள்' என்று அறிவுறுத்தினார்.
இதனையடுத்து, விரைவில் இரு தரப்பிலும் 50 உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனை குழு அமைக்க வேண்டும் எனவும், பூட்டிய தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தைத் திறக்கவும்; இந்தக் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் நல்ல மழைப்பொழிவு: அதிகளவில் வந்த 'புள்ளினங்காள்'!