திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணறு ஒன்றில் சுர்ஜித் என்ற இரண்டு வயதுக் குழந்தை தவறி விழுந்த விவகாரம் அனைத்து தரப்பினரையும் கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. 73 மணிநேரம் கடந்தும் குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பயனற்ற நிலையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாவட்டத்திலுள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளைப் பாதுகாப்பான முறையில் மூடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில், கடந்த இரண்டு நாள்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான 69 ஆழ்துளைக் கிணறுகள், தனியாருக்குச் சொந்தமான 27 ஆழ்துளைக் கிணறுகள் என மொத்தம் 96 போர்வெல்கள் மூடப்பட்டுள்ளது. மேலும், பயனற்ற நிலையிலுள்ள ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டறியப்பட்டு மூடப்பட்டு வருகிறது.
தனியாரால் நிறுவப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் ஏதேனும் மூடப்படாமல் இருந்தால் உடனடியாக மூட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படுவதுடன், காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் அரசுத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தோண்டப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள் ஏதேனும் பாதுகாப்பற்ற முறையில் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அதற்குப் பொறுப்பான அனைந்து அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆபத்தான நிலையில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், பொதுமக்கள் 1800-425-1997 என்ற கட்டணமில்லா அலைப்பேசி எண்ணிற்கோ அல்லது 86672-46027 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கோ உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மெகராஜ் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றை தாமாக முன்வந்து மூடிய மக்கள்!