நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அடுத்து சேளூர் சாணார்பாளையம் உள்ளது. இந்த ஊருக்கான பெயரினை மாற்றம் செய்து சேளூர் ஊராட்சி எனப் பெயர்ப் பலகை ஊராட்சி மூலம் நிறுவப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று ( ஜூலை 15) அப்பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் நாடார் மகாஜன என்ற பெயர்ப் பலகையில் சேளூர் சாணார்பாளையம் எனப் பெயரை அச்சிட்டு நிறுவியுள்ளனர்.
இதனையடுத்து இன்று (ஜூலை 16) காலை நாடார் மகாஜனப் பெயர் பலகையில் இருந்த சேளூர் சாணார்பாளையம் என்ற பெயரையும், சேளூர் ஊராட்சி என்ற பெயரையும் அடையாளம் தெரியாத நபர்கள் கறுப்பு வண்ண மைப்பூசி அழித்துள்ளனர்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்திவேலூர் மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பழனிசாமி, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
அதில், கோட்டாட்சியர் தலைமையில் பேசித் தீர்வு காணப்படும் எனவும்; கறுப்பு வண்ணம் பூசி அழித்தவர்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.