நாமக்கல்: நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 416 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்குச் செப்டம்பர் மாதமும் சுங்க கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் 43 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில், 29 சுங்கச்சாவடிகள் தனியார் வசம் உள்ளன. மீதமுள்ள 14 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் உள்ளன. ஆனாலும், கட்டணம் வசூலிக்கும் உரிமை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி இவ்வாண்டு ஒரு பாதி சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதலும் மறுபாதி சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதியான இன்று முதலும் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதில் ஒரு பகுதியாக நாமக்கல் அடுத்த ராசாம்பாளையத்தில் நாமக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் என்.கே டோல் & ரோடுவேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சுங்கச் சாவடியில் நள்ளிரவு முதல் சுங்க கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, கார்களுக்கு ஒரு முறை பயணத்திற்கு 60 ரூபாயில் எவ்வித மாற்றம் இல்லாத நிலையில், பலமுறை பயணத்திற்கு 85 ரூபாயிலிருந்து 5 ரூபாய் உயர்ந்து 90 ரூபாயாகவும், இலகு ரக வாகனங்கள் ஒரு முறை பயண கட்டணம் 100 ரூபாயிலிருந்து எவ்வித மாற்றமும் இல்லாத நிலையில், பலமுறை பயணத்திற்கு 150 ரூபாயிலிருந்து 5 ரூபாய் உயர்ந்து 155 ரூபாயாகவும், பேருந்துகள், லாரிகள் ஒரு முறை பயணத்திற்கு 200 ரூபாயிலிருந்து 5 ரூபாய் உயர்ந்து 205 ரூபாயாகவும், பலமுறை பயண கட்டணம் 305 ரூபாயில் எவ்வித மாற்றம் இல்லாத நிலையில், மல்டி ஆக்ஸில் வாகனங்கள் ஒருமுறை பயணத்திற்கு 325 ரூபாயிலிருந்து 5 ரூபாய் உயர்ந்து 330 ரூபாயாகவும், பலமுறை பயணத்திற்கு 485 ரூபாயிலிருந்து 10 ரூபாய் உயர்ந்து 495 ரூபாயாகவும் உயர்ந்துள்ளதாகச் சுங்கச் சாவடி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
சுங்க கட்டணம் உயர்ந்த காரணத்தால் சரக்கு வாகனங்களின் கட்டணமும் உயர்த்தப்படுவதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. மேலும் இது குறித்து லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களிடம் கேட்டபோது, "சுங்க கட்டணம் உயர்வு என்பது லாரி தொழிலை மேலும் நசுக்குவதோடு, கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் இழக்கும் நிலை ஏற்படும் எனவும் இதனால் விலைவாசி உயர்வு ஏற்பட்டு, அவை கீழ்த்தட்டு மக்களின் தலையில் சுமத்தப்படுவதாகவும், ஏற்கனவே சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது போலச் சுங்க கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும்" என்றார் நாமக்கல்லைச் சேர்ந்த லாரி உரிமையாளர் அருண்.
"லாரி உதிரி பாகங்கள் மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஏற்கனவே லாரி தொழில் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளது. இந்த சூழலில் மத்திய அரசு சுங்க கட்டணம் உயர்த்தி உள்ளது லாரி உரிமையாளர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பலரும் லாரிகளை விற்பனை செய்து வேறு தொழிலுக்கு சென்றுவிட்தால் இதனை நம்பி உள்ள லாரி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சுங்க சாவடிகள் கட்டணத்தை உயர்த்தினாலும் தரமான சாலை வசதிகள் செய்வதில்லை. சுங்க கட்டணம் உயர்வதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். ஆகவே மத்திய அரசு சுங்க கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார் வேலூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முருகேசன்.
இதையும் படிங்க: Commercial LPG: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு.. சென்னையில் கேஸ் விலை என்ன?