நாமக்கல் மாவட்டம் என்றவுடன் கோழிப்பண்ணைதான் அனைவரின் நினைவுக்கும் வரும். இந்தியாவின் முட்டைத்தேவையை நாமக்கல் மண்டலம் பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. இக்காலத்தில் உணவுப் பொருட்களில் முட்டை ஒரு இன்றியமையாத இடத்தை பெற்றுள்ளதால், முட்டையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படி கோழிப்பண்ணை உரிமையாளர்களும் மத்தியில் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையை எதிர்நோக்கியுள்ளார்கள்.
பாப்கார்ன் மீதான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்:
இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் மார்கெட்டிங் சோசைட்டி மாநிலத்தலைவர்சுப்ரமணி கூறுகையில் "கோழிப் பண்ணைகள் தீவனத்திற்கு பெரும்பாலும் மக்காச்சோளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பாப்கார்ன் தயாரிக்கப் பயன்படும் மக்காச்சோளத்திற்கும் தீவனத்திற்காகப் பயன்படும் மக்காச்சோளத்திற்கும் ஒரே ஜி.எஸ்.டி என்ற அடிப்படையில் வரிவிதிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு பரிசீலனை செய்து தீவனத்திற்காகப் பயன்படும் மக்காச்சோளத்தின் வரியைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் பேசிய அவர், இந்தியாவின் பல மாநிலங்களில் குறிப்பாகப் பீகார், சட்டீஸ்கர், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் சோளம்,கம்பு, அரிசி போன்ற தானியங்கள் குடோன்களில் பல ஆண்டுகளாகச் சேமித்துவைத்து கெட்டுப்போகும் அளவிற்கு உள்ள தானியங்கள் கால்நடைகளின் தீவனத்திற்காக அவை பயன்படும். இவை தற்போது ஏலம் விடப்பட்டும் நிலையில், அந்த ஏலத்தில் தமிழ்நாடு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கலந்துகொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் எனத்தெரிவித்தார்.
குளிர்சாதன சேமிப்பு கிடங்கு அமையுங்கள்:
தமிழ்நாடு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் இளங்கோவிடம் கேட்டபோது,
பல ஆண்டுகளாக மத்திய மாநில அரசுகளிடம் COLD STORAGE என அழைக்கப்படும் குளிர்சாதன சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. முட்டை விலை குறையும் போது அதனைப் பதப்படுத்தி விற்பனை செய்ய ஏதுவாக இருக்கும். முட்டைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு பல வழிகளில் சலுகைகள் வழங்கியது. ஆனால் தற்போது அந்த சலுகைகளின் மானியத்தைக் குறைத்துவிட்டனர். எனவே பட்ஜெட் தாக்கலில் இந்த மானியத்தை அதிகரிக்க வழிவகை செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
எந்தாண்டும் இல்லாத அளவுக்கு தற்போது தீவனம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தீவனத்திற்குப் பயன்படும் மக்காச்சோளம் கிலோ 24 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனால் வெளிநாடுகளிலிருந்து மக்காச்சோளத்தை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு வழிவகைச் செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.