நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்த மேல்சாத்தம்பூர் பஞ்சாயத்துக்கு உள்பட்ட மாரியம்மன்கோவில்புதூரில், கிளை அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது.
இந்தக் கிளை அஞ்சலகத்தில் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், கூலித் தொழிலாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் சேமிப்புக் கணக்கு, மாதாந்திர சேமிப்புக் கணக்கு, வைப்புக் கணக்கு, செல்வமகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட கணக்குகளைத் தொடங்கி பணம் சேமித்து வருகின்றனர்.
இந்தக் கிளை அஞ்சலகத்தில் அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல் அலுவலராகப் பணியாற்றிவருகிறார். இவர் மாதாந்திர சேமிப்புக் கணக்குக்குப் பணம் செலுத்துபவர்களுக்கான கணக்குப் புத்தகங்களை அவரே வைத்துக்கொண்டு, பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சிலர் தங்களின் கணக்கு காலக்கெடு முடிந்த நிலையில், பணத்தை திரும்பப் பெற கிளை அஞ்சலகத்தை நாடிய நிலையில், அவர்கள் கணக்கில் பணம் ஏதும் இல்லாமல் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கிளை அஞ்சலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்குத் தெரியவந்ததை அடுத்து, அவர்கள் தபால் அலுவலகம் முன்பு, தங்களது பணத்தைக் கேட்டு முற்றுகையிட்டனர். இதனைத்தொடர்ந்து தங்கவேல் தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நல்லூர் காவல் துறையினர் தலைமறைவான தங்கவேலை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 'தொழிற்சாலைகளில் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி' அமைச்சர் பி.மூர்த்தி!