நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 92 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் இதுவரை 86 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 14 வாகன சோதனைச்சாவடிகளில் வருவாய், சுகாதாரம், காவல் துறையினர் சுழற்சி முறையில் சோதனைப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் மூலம் கரோனா தொற்று பரவாமல் இருக்க மாவட்ட எல்லைகளின் வாகன சோதனைச்சாவடிகளில் காவல் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள எம்.மேட்டுப்பட்டி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடி வழியாக வரும் வாகனங்களை, கண்காணிப்பாளர்கள் தடுத்துநிறுத்தி இ-பாஸ் உள்ளதா என்பதை சோதனைசெய்து பாஸ் உள்ள வாகனங்களை மட்டுமே நாமக்கல் எல்லைக்குள் அனுமதித்துவருகின்றனர்.
இ-பாஸ் இல்லாமலோ அல்லது போலி இ-பாஸ் மூலமாக வரும் வாகனங்களைப் பறிமுதல்செய்து அவர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டம், இந்திய தொற்றுநோய் சட்டம் - 1897 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தும், அவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இருப்பினும், சிலர் பிரதான சாலைகளைத் தவிர்த்து, அருகில் உள்ள கிராம சாலைகளின் வழியாக மாவட்டத்திற்குள் நுழைகின்றனர். அவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணிகளிலும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பெருநகர சென்னை பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அங்கு தங்கியிருந்த பலர் சொந்த ஊர் திரும்ப வாய்ப்புள்ளதால் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.