நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பில்லூர் ஊராட்சிக்குள்பட்ட மேற்கு புதூரைச் சேர்ந்தவர் மணி. இவர் ஆடு, மூன்று கறவை மாடுகளை வைத்து பால் விற்பனை செய்கிறார்.
இந்நிலையில் வழக்கம்போல் மணி, நேற்று (நவ. 27) காலை ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று பிற்பகலில் மேய்ச்சலை முடித்து வீட்டிற்கு அழைத்துவந்தார். பின்னர், அதனை மாட்டு கட்டுத்தறியில் உள்ள தாளியில் தண்ணீர் குடிக்கவைத்தார்.
அப்போது மூன்று மாடுகளும் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும்போதே கீழே விழுந்து துடிதுடித்து இறந்தன. இதனால் செய்வதறியாது திகைத்த மணி, நாமக்கல் கால்நடைத் துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தார்.
நாமக்கல் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் நடராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இறந்துகிடந்த மாடுகளை ஆய்வுசெய்து ரத்த மாதிரிகளை எடுத்துச்சென்றனர். ஆய்வின் முடிவில் மாடுகள் இறந்த காரணம் குறித்து தெரியவரும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.