நாமக்கல்: நாமகிரிப்பேட்டை அடுத்த சின்ன அரியா கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர், செந்தில் பாண்டியன். இவர் நாமகிரிப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். இவரது மனைவி தங்கம். இவர்களுக்கு ஸ்வேதா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
ஸ்வேதா ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு, கடந்த ஆண்டு நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் நீட் பயிற்சி பெற்றுள்ளார்.
கடந்தவாரம் திருச்செங்கோட்டில் உள்ள மையத்தில் அவர் நீட் தேர்வு எழுதிவிட்டு வந்தது முதல் கவலையோடு காணப்பட்டுள்ளார். ஸ்வேதாவை அவரது பெற்றோர் சமாதானம் செய்து வந்துள்ளனர்.
காவல்துறையில் புகார்
இதற்கு முன், ஒருமுறை நீட் தேர்வு அவர் எழுதி தேர்ச்சி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, நேற்று (செப். 19) காலை 11 மணியளவில் தோழி வீட்டுக்குச் செல்வதாகக் கூறி சென்ற ஸ்வேதா, மீண்டும் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் இரவு வரை ஸ்வேதா கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவர்களின் பெற்றோர் நேற்றிரவு நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தேனி மாவட்டம், உத்தமபாளையம் காவல் நிலையத்தில் மாணவி சரணடைந்ததாக வந்த தகவலையடுத்து நாமக்கல் காவல் துறையினர் அங்கு சென்றுள்ளனர்.
16 மணிநேரத்தில் கண்டுபிடிப்பு
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர் கூறுகையில், " மாயமான மாணவி ஸ்வேதா இன்று (செப். 20) தேனி உத்தமபாளையம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். அவரைத் தேடுவதற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுத் தேடி வந்தனர். தற்போது 16 மணி நேரத்தில் மாணவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்" என்றார்.
மேலும், காதல் விவகாரம் காரணமாக மாணவி வீட்டிலிருந்து காணாமல் போய் உள்ளார். அம்மாணவியும், அவரது காதலர் டேனியலும் திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். காவல் நிலையம் முன்பு அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அடிப்படை வசதிக்காக தவிக்கும் சர்க்கஸ் கலைஞர்கள்...