சென்னை: சென்னையில் இருந்து அபுதாபி செல்லும் எதிஹாட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளையும் உடைமைகளையும் சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து விமானத்திற்குள் அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மார்டீன் ரங்கேல் (70) என்பவர் இந்த விமானத்தில் அபுதாபி வழியாக சுவிட்சர்லாந்து செல்ல வந்திருந்தார். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்த போது அவருடைய கைப்பையில் ஜிபிஎஸ் கருவி ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர்.
இந்திய விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, ஜிபிஎஸ் கருவியை பயணிகள் விமானத்தில் எடுத்து செல்ல அனுமதி இல்லை. எனவே பாதுகாப்பு அதிகாரிகள் சுவிட்சர்லாந்து பயணி மார்டீன் ரங்கேலிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், "தான் சுற்றுலா பயணியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி வழியாக சென்னைக்கு வந்தேன். அப்போது இந்த ஜிபிஎஸ் கருவியை நான் எடுத்து வந்தேன். ஆனால் டெல்லி உட்பட எந்த விமான நிலையத்திலும் இதை தடுக்கவில்லை. மேலும் எங்கள் நாட்டில் விமானங்களில் ஜிபிஎஸ் கருவிகள் எடுத்து செல்வதற்கு தடையும் இல்லை. எனவே நான் இந்த கருவியுடன் விமானத்தில் பயணம் செய்ய வந்தேன்" என்று கூறினார்.
ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் அவருடைய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. சுவிட்சர்லாந்து பயணி மார்டீனின் பயணத்தை ரத்து செய்து அவரிடம் இருந்த ஜிபிஎஸ் கருவியையும் பறிமுதல் செய்தனர். அதன் பின்பு சுவிசர்லாந்து நாட்டுப்பயணியை மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஜிபிஎஸ் கருவியையும் போலீசார் இடம் கொடுத்துள்ளனர். சென்னை விமான நிலைய போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.