நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த வி.மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் 50க்கும் மேற்பட்டோரின் பெயர்களில் போலி முகநூல் மற்றும் டிவிட்டர் கணக்குகளைத் தொடங்கிய இளைஞர் ஒருவர், அதன் மூலம் ஆபாசப்பேச்சுக்கள் மற்றும் ஆபாசப்படங்களைப் பகிர்ந்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலர் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட குமாரபாளையம் காவல்துறை அதிகாரிகள், அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் முருகேசனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அவர் போலி முகநூல் மற்றும் டிவிட்டர் கணக்குகளைத் தொடங்கி அதில் ஆபாசமாகப் பேசியும், ஆபாசமாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பியும் வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இயக்குநர் விடுதலை சிகப்பி மீதான வழக்கின் விசாரணையை தடை செய்தது சென்னை உயர் நீதிமன்றம்..!
இதனை அடுத்து அவரை கைது செய்வது மட்டும் இன்றி அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்திய பெண்கள் குற்றவாளி முருகேசன் மீது தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் விசாரணைக்கு பின்புதான் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸார் தரப்பில் கூறப்பட்ட நிலையில் பொதுமக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்குப் பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், போலீஸார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்த முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அதுவும் தோல்வியில் முடிவடைந்த நிலையில், வழக்கறிஞர் ஒருவர் போலீஸார் மற்றும் பொதுமக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட முருகேசன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெண்களின் பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி இளைஞர் ஒருவர் இதுபோன்ற ஆபாச குற்றத்தை மேற்கொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விமானங்களின் மீது லேசர் ஒளி - சென்னை விமான நிலைய அதிகாரிகள் புகார்!