நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் மூலம் 5 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு தினசரி 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி ஆகும் முட்டைகள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் நேற்று (டிச.9) வரை அதாவது 14 நாட்களாக முட்டையின் விலை 5.45 காசுகளாக இருந்து வந்தது. இதற்கிடையே, இன்று (டிச.10) முட்டை ஒன்றின் கொள்முதல் விலை, 20 காசுகள் குறைந்து 5 ரூபாய் 25 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில்லறை விற்பனையில் முட்டை ஒன்றின் விலை ரூ.5.50 காசுகள் வரை விற்பனை செய்யப்படுகிறது.
விலை குறைவு குறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், '14 நாட்களாக முட்டையின் விலை மாற்றம் ஏதுமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மாண்டஸ் புயல் (Mandous Cyclone) மற்றும் தொடர் மழையால் தமிழ்நாடு முழுவதும் முட்டை கொண்டு செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்வதாலும் முட்டை விற்பனையில் மந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், பண்ணைகளில் முட்டை தேங்கியது.
எனவே, விற்பனையினை அதிகரிக்கும் நோக்கில் விலை குறைக்கப்பட்டது; வருங்காலங்களில் விலை, மேலும் உயரவே வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இன்று 20 காசுகள் குறைந்து ரூ.5.25 ஆக நிர்ணயம் (Namakkal egg purchase price Fall) செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
அதேபோல், கறிக்கோழி உயிருடன் கிலோ ஒன்றுக்கு ரூ.106-யும் முட்டைக் கோழி 102 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் கறிக்கோழி கிலோ ஒன்றுக்கு ரூ.150 முதல் ரூ.180 வரை விற்பனையாகிறது.
இதையும் படிங்க: சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு அனுமதி உண்டா?