பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் பாலியல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரியும் இந்திய மாணவர் சங்கம் சார்பாக மாவட்ட துணைத்தலைவர் பிரபாகரன் தலைமையில் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் 300 பேர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலியல் பிரச்னைக்கு உரியவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், அரசுக்கு ஆதரவாக செயல்படும் காவல் துறையினரை கண்டித்தும் மாணவர்கள் கண்டன கோஷங்களை முழங்கினர். இந்த சம்பவத்தில் விசாரணை அலுவலராக உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை மாற்றக் கோரியும் மாணவ, மாணவிகள் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்தால் நாமக்கல்- மோகனூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் மாணவ, மாணவியர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நாமக்கல் அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.