நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்துதல் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, வருவாய் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் வணிகர் சங்கத்தினர் என 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும், மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், கடைகள் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகர் சங்க நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மெகராஜ், ”அரசு அறிவித்துள்ளபடி இரவு 8 மணிவரை கடைகள், வணிக நிறுவனங்களை திறந்துகொள்ளலாம். அதே சமயம் அரசு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகள் கண்டறியப்பட்டால் 15 நாள்களுக்கு மூடி சீல் வைக்கப்படும். கரோனா பரவல் மாவட்டத்தில் வேகமாக பரவி வருவதை அடுத்து வணிக நிறுவனங்கள் தாமாக முன்வந்து தங்களின் வணிக நிறுவனங்கள், கடைகளை முன்னதாக மூடிக்கொண்டால் அது வரவேற்கத்தக்கது” என்றார்.