நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சுழற்சங்கம் (ரோட்டரி கிளப்) சார்பில் ஏழை, எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் இராசிபுரத்தில் இன்று (நவ.25) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 108 கறவை மாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மெகராஜ் இன்று வழங்கினர். அப்போது பேசிய ஆட்சியர் மெகராஜ், "இன்று நிவர் புயல் கரையைக் கடக்கும் என்பதால் நாமக்கல் போன்ற உள் மாவட்டங்களில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றாலும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
நாமக்கல் மாவட்ட நிர்வாகம் காவிரி கரையோரப் பகுதி, திருமணிமுத்தாறு பகுதிகளில் தொடர்ந்து வருவாய்த் துறை உள்ளிட்ட அரசுத் துறையினர் கண்காணித்துவருகின்றனர். எனவே பொதுமக்கள் தாழ்வான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.
புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மழை அதிகமாகப் பெய்தால் மின்சாரம் துண்டிக்கப்படும். எனவே பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம், தேவையான பாதுகாப்புப் பொருள்களை வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.