நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து ஓய்வு பெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவல்லி, அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் குழந்தை கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 6 பேர் என மொத்தம் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதில் அமுதவல்லி, அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், புரோக்கர் அருள்சாமி ஆகிய 3 பேரை நாமக்கல் சிபிசிஐடியினர் நேற்று முதல் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதனிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் கூறியதாவது, கொல்லிமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ், போன்ற விபரங்கள் உள்ளிட்டவை குறித்து வீடுகள் தோறும் சென்று சுகாதாரத்துறையினர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் முடிவில் அறிக்கை தயாரிக்கப்படும்.
அதனைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் ராசிபுரம் மற்றும் கொல்லிமலையிலிருந்து குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.