நாமக்கல்லில் திமுக கூட்டணி வேட்பாளரை அறிவிக்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டணிக் கட்சியினர் பலர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சின்ராஜ் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு மரியாதை செலுத்தினார்.
இதில் கலந்துகொண்ட கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேசுகையில், "நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சின்ராஜ் பரப்புரையை தொடங்கியுள்ளார்.
மிகச்சிறந்த வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அனைத்து தரப்பு மக்களும் வாழ்த்தி வருகின்றனர். பரப்புரைக்கு செல்லும் இடமெங்கும் பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர்.
மத்தியில் உள்ள பாஜக ஆட்சியில் 2014ல் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்ற கோபத்தில் மக்கள் உள்ளனர். எங்களுடைய கூட்டணி வெற்றி பெறும்போது விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திமுக கூட்டணி வேட்பாளரின் வேட்புமனுவை ஏற்றுக் கொள்வதில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆசிய மரியம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்.
அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவில் பல்வேறு குறைபாடுகள் இருந்தபோதிலும் அவை கண்டுகொள்ளாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதை திமுக தலைமை கழகம் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டிய பிறகும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதுக்குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும். அந்த புகாரின்மீது உரிய விசாரணை நடத்தாவிட்டால் உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்படும்.
மாவட்ட தேர்தல் அலுவலர் ஆசிய மரியம் அதிமுகவின் மாவட்ட செயலாளர் போல் செயல்பட்டு வருகிறார். அமைச்சர் தங்கமணிக்கு பிறகு அதிமுகவின் முக்கிய புள்ளியாகவே நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து அதிமுகவிற்கு உழைத்து வருகிறார்" என குற்றம் சாட்டினார்.