தற்போதைய நவீன உலகத்தில், பல்வேறு மருத்துவ வசதிகள் வந்தபோதிலும் குழந்தை வரம் கிடைக்காமல் பலர் தவித்துவருகின்றனர். இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் சிலர், குழந்தைகளை மறைமுகமாக விற்பனை செய்துவரும் கொடூரம் அவ்வப்போது அரங்கேறிவருகிறது.
அதன்படி, ராசிபுரத்தில் ஓய்வுபெற்ற செவிலி அமுதா குழந்தைகளை மறைமுகமாக விற்பனை செய்துள்ளார். கடந்த 30 வருடங்களாகத் தங்கு தடையின்றி இந்த விற்பனை ஜோராக நடந்துவருகிறது. இதில் ஆண் குழந்தை வெள்ளையாக 3 கிலோ எடையுடன் இருந்தால் குறைந்தபட்சம் ரூ. 4 லட்சம் வரையும், பெண் குழந்தை என்றால் 3 லட்சம் வரை விற்பனை செய்துள்ளார்.
இந்நிலையில் தரகர் செவிலி அமுதாவிடம் ஒரு தம்பதிகள் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தரகர் செவிலியர் அமுதா கைது செய்யப்பட்டார்.
இதில் கைதான குழந்தைத் தரகர் அமுதா, தான் இதுவரை மூன்று குழந்தைகளை விற்றுள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து தற்போது நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
குழந்தை விற்பனை செய்யும் இந்தக் கும்பல் பல இடங்களில் முக்கியமாக வெளி மாநிலங்களிலிருந்தும் குழந்தைகளைத் திருடி வந்து விற்று வருவதாகவும், இந்தக் குழந்தை வியாபாரம் இதுவரை நாமக்கல்லில் கொடிகட்டிப் பறந்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.