நாமக்கல், அண்ணா நகரைச் சேர்ந்த விஸ்வா, பிரதாப், சபரி, உள்ளிட்ட ஐந்து பேர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் மிக வேகமாக சென்றுள்ளனர்.
இதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த நல்லிப்பாளையம் காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் கவனித்து வந்துள்ளார். இவர்கள் ஐவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை கடந்துசென்றனர்.
மீண்டும் அதே பகுதியில் மிக வேகத்துடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். ஒருகட்டத்தில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் சென்ற பெண் ஒருவரின் வாகனத்தில் இடித்து விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவந்த நல்லிப்பாளையம் காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் உத்தரவின்பேரில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினர் விஸ்வா, பிரதாப், சபரி ஆகியோரை கைது செய்தனர். மற்ற இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
விபத்திற்குள்ளாக்கிய மூன்று இளைஞர்கள் மீது ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்குதல், ஒரே வாகனத்தில் ஐந்து பேர் பயணம் செய்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் பயணம் செய்த வாகனத்தில் பதிவு எண் இல்லாததால் திருட்டு வாகனமா என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும், தப்பியோடிய இரண்டு பேரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.