நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டப்பள்ளி வேளாளர் காலனியைச் சேர்ந்தவர் மூதாட்டி மணிக்கொடி. கடந்த ஜனவரி 21ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் மூதாட்டியின் தாலி சங்கிலியை பறித்துச்சென்றனர்.
இதுக்குறித்து திருச்செங்கோடு நகர காவல்நிலையத்தில் புகார் செய்ததை தொடர்ந்து திருச்செங்கோடு காவல்துணை கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் நான்குபேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையைத் தொடங்கினர்.
அதில் திருச்செங்கோட்டில் உள்ள பல்வேறு சிசிடிவி காட்சிகள் உட்பட ஈரோடு, கோபி உள்ளிட்ட பல்வேறு இடங்களின் 153 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஈரோடு மாவட்டம் கோபிவரை சென்றது கண்டறியப்பட்டது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களின் புகைப்படம், வீடியோ காட்சிகளை வைத்து இவர்கள் தேனி மாவட்டம் மயிலாடும்பாறையைச் சேர்ந்த பாண்டியராஜன், சென்னையைச் சேர்ந்த ரவி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை நாமக்கல் சாலையில் வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரிணை செய்ததில், அவர்கள் திருச்செங்கோட்டில் நடைபெற்ற செயின் பறிப்பிலும் கோவை, திருப்பூர், பாண்டிச்சேரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட ரவி, பாண்டியராஜன் என்பது தெரியவந்திருக்கிறது.
அதன்படி காவல் துறையினர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்ட இருவரும் சென்னையில் சிறையில் சந்தித்து நண்பர்களாகி உள்ளார் என்று தெரிவந்தது.
தொடர்ந்து இருவரிடமும் இருந்து திருச்செங்கோட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஐந்து சவரன் தாலிச்செயின் உட்பட காரமடை பகுதியில் கொள்ளயடித்த இரண்டரை சவரன் தாலிச்செயின் ஆகியவற்றை காவல்துறையினர் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். மேற்படி ரவி, பாண்டியராஜனை திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வேலூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களின் புகைப்படம் வெளியீடு!